Type Here to Get Search Results !

வாடகை வீடு

 வாடகைக்கு பொருட்களை வாங்கி அனுபவித்த காலத்தில் கட்டம் தெரியவில்லை நட்டம் ஏதுமில்லை சந்தோசம் நிம்மதி.. மிகுதியாக...


வாடகை பணத்தோடு வாங்கியதை திருப்பி கொடுத்துவிட்டோம் பாதிப்பு ஏதுமில்லை.. பாதகம் நேரவில்லை


குத்தகைக்கு குடியிருந்தோம் குடக்கூலி தந்து வந்தோம்.. பயன்பாட்டு செலவோடு போனது பராமரிப்பு செலவில்லை 


சொந்தம் ஆக்கிக் கொள்ள

துடித்தோம் சுகவாசியாக நினைத்தோம் பராமரிப்பு செலவு பழி தீர்த்தது...


அன்று வாடகைக்கு விட்டவன் எல்லாம் இன்று வட்டிக்கு விடுகிறான்...


தேவைக்கு மட்டும் வாங்கி பயன்படுத்திய போது பயன்பாடு புரிந்தது...


தேவைப்படும் என்று வாங்கி குவித்த பொருட்களை தேவையற்று.. தேவைப்படும் இடத்தை அடைத்தபடி 


பார்த்து பார்த்து வாங்கிய பொருட்கள் பயன்படுத்தாமல் பழசாகி போகிறது.. பயன்படுத்தாமலே பழுதாகி போகிறது...


வையகத்தில் வாடகைக்கு வாழ வந்தவர்கள் என்பதை நாமே மறந்து போகிறோம்....


வாடகைக்கு மிதிவண்டி எடுத்து வாழ்ந்த காலம் வசந்தமாக இருந்தது....ஆளுக்கு ஒரு வாகனம் கேட்பாரற்று....


வீட்டுக்கு ஒரு வாகனம் வீணாக்கி போகிறது... வீடுகள் தற்போது கிடங்காய் மாறியது...


உடைமைகளுக்காகவே உரிமையில் கூட விட்டுக் கொடுக்கிறார்கள்...

உருப்படிகளை கொண்டே உறவுகளை மதிக்கிறார்கள் 


நான் எனது என்று தூக்கி சுமப்பது இன்றளவில் கடன் சுமையை தவிர வேறு ஒன்றும் இல்லை....


உடன் வரப்போவது ஒன்றும் இல்லை என்று அறிந்தும்.. உடமையை தனதாக்கிக் கொள்ள முயலும் மானுடம்...


பயன்பாட்டு பொருட்கள் தான் 

நம்மை பயன்படுத்துகின்றன

நாமும் பயனற்று போகிறோம் பயன்பாட்டு பொருட்களை போலவே 


விழுதாக துளிர்க்கும் நேரத்திலேயே பழுதாகி போகிறோம்.. பொருளைத் தேடி தேடி பொருளற்று வாழ்கிறோம்


இவண் 

ஆற்காடு குமரன் 

9789814114

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.