பை நிறைய சான்றிதழோடு படிப்படியாக ஏறினேன் கை நிறைய சம்பளம் வேண்டி....
தகுதியின்மை நேர்முகத் தேர்வில் நிராகரிக்கப்படுகிறேன்.. முன் அனுபவம் இல்லையாம்...
முன் அனுபவத்தோடா மூன்று முடிச்சு போட்டார்கள் இவர்கள்.. முதல் இரவு அறைக்குள் நுழைந்தார்கள் இவர்கள்
படிப்பறிவில்லாத அமைச்சரின் பரிந்துரை வேண்டுமாம்
பட்டவர்த்தனமானது படிப்புக்கும் பணிக்கும் சம்பந்தம் இல்லை என
பதவிக்கு இருக்கும் மதிப்பு படிப்புக்கு இல்லை என.. பட்டறிவுக்குப் பின் பெரும் அறிவு பள்ளி தருவதில்லை என...
கல்வியை தகுதியாய் ஏற்றுக் கொள்ளவில்லை இச்சமுகம்.. கலவியை முன்னிறுத்தியது..
கலவியினால் கருத்தரிப்பது தானே இந்த சாதி... கலப்படத்திற்கு இருக்கும் மதிப்பு... தரத்திற்கு கிடைப்பதில்லை...
எந்த இனம் என்றது மனித இனம் என்றேன் எடுத்தெறிந்தது.. என் மீது எரிந்து விழுந்தது
நான் சாதித்த சான்றிதழ்களை விட்டு விட்டு சாதி சான்றிதழ் தேடுகிறான்
சாதி சலுகை கொண்டு சாதித்தவன்
ஒவ்வொரு சான்றிதழிலும் என் தாய் தந்தையின் குருதியை காண்கிறேன்
அடகு கடைக்காரன் அறிமுகமானவன் என் அடுத்தடுத்த கல்வியாண்டு...
வட்டிக்கு வாங்கிய பணத்தில் தான் என் வகுப்பறை மாறியது... வகுப்பறையின் கரும்பலகை இருளாகவே கற்றவன் எதிர்காலம்
கல்வித் தகுதிக்கு ஏற்ற பணியை தேடி அலைந்தேன்.. கைகூடவில்லை எவன் கால் பிடிக்கவும் தோன்றவில்லை..
கட்டணம் செலுத்திக் கற்ற கல்வி.. கையூட்டினால் பெற்ற பதவி.. கடைசி வரை கையேந்தவே வைக்கும்
தகுதிக்கு ஏற்ற பணியை தேடுவதை விட கிடைக்கின்ற பணிக்கு ஏற்ப தகுதியை மாற்றிக் கொள்ள துணிந்தேன்...
அடிப்படை கல்வி அவசியம் தான்
கற்ற கல்வியை விற்கும் காலம்
விற்கும் கல்வி விளையுமா நாளும்
பரண் மேல் கிடக்கிறது
அரண் ஆகா சான்றுகள்
பரிகசித்து சிரிக்கிறது
அடகு கடை சீட்டுகள்....
அடிவயிறு கிள்ளியது அடுத்த வேளை சோற்றுக்கு..இரை தேடி போகிறேன் நான் என் போக்குக்கு
இவண்
ஆற்காடு குமரன்
9789814114