Type Here to Get Search Results !

வழிகாட்டி

 வாழ்ந்து முடித்தவர்கள் வழிகாட்டியாக வழியெங்கிலும்.....


வாழ வழி சொல்கிறார்களோ இல்லையோ வந்து சேர்வதற்கு வழித்தடம் சொல்கிறார்கள் வாயைத் திறக்காமலே.....


தலைவர் சிலைகள் மட்டும் எப்போதுமே தவறான வழியை காட்டுவதில்லை.... நெறிகள்....?


சிந்தனைவாதிகளுக்கும் சிலை வைக்கிறார்கள் சிறை சென்றவனுக்கும் சிறை வைக்கிறார்கள்....


உண்மையாய் வாழ்ந்தவருக்கும் சிலை வைக்கிறார்கள் ஊழல் புரிந்தவருக்கும் சிலை வைக்கிறார்கள்......


ஈட்டிய பணத்தில் பதிந்திருப்பதால் தான் இன்னமும் காந்தி நினைவில் இருக்கிறார்....


நினைவாக நிறுவிய சிலைகள் நினைவுக்கு வருகின்றன..

நிச்சயம் முகவரி தேடுகையில்....


அடி கணக்கில் சிலை வைக்கிறார்கள்

அத்தனையும் குடிமக்களின் அடிமடியை சுரண்டி...


இனப்பெருமையை தம்பட்டம் அடித்துக் கொள்ள சிலை வைக்கிறார்கள்... இனம் பிரித்து


கொள்கை பிடிப்போடு வாழ்ந்தவனுக்கும் சிலை வைக்கிறார்கள்...கொள்ளையடித்தவனுக்கும் சிலை வைக்கிறார்கள்...


சிலையை கூட சில நேரம் சிறை வைக்கிறார்கள்... செத்த பாம்பை அடிக்கும் கதை தான் சிலையை உடைக்கும் வினை....


சிலைக்கும் காவல் இருக்கும் அவல நிலை இங்கு... இலைக்கும் காவல் இருந்த கதை இருக்கிறது இங்கு....


இல்லாதவனுக்கு சிலை வைப்பது என்பது இந்த மானுடத்தின் மனநிலை நான் கடவுளைச் சொல்லவில்லை..


நடிகைக்கும் சிலை வைக்கிறான் சிலையாவது நடிக்காமல் இருக்கட்டும் என்று...


குப்புவுக்கு கோவில் கட்டிய கூமுட்டைகளே..குப்பு குலம் மாறி நிலம் மாறி குணம் மாறி...


இல்லாள் இன்னமும் செல்வி கட்டியவன் கற்சிலையாக.....

வீதியோரத்தில்....


அறிஞனுக்கு சிலை வையுங்கள் விஞ்ஞானிகளுக்கு சிலை வையுங்கள் வரும் தலைமுறை கண்டு உணரட்டும்.....


அரசியல் வாதிகளுக்கு மட்டும் சிலை வைக்காதீர்கள்... இன்று இருப்பவன் அத்தனை பேரும் வியாதிகள்.....


வீதியில் சிலை நிறுவுவதை விட மத்தியில் நிலை நிறுத்துங்கள் மற்றவர் நினைவுகளை....


சிலை என்பது நிலை அல்ல நினைவுகளே நிலை... நல்லவன் என்றால் ஓயாது அவன் அலை...


இவண்

ஆற்காடு குமரன்

9789814114

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.