சிந்திக்கும் திறனுடைய மதியை சிரசில் வைத்தது சிறுபிள்ளைத்தனமாக கண்டவன் காலில் விழுவதற்கா....?
காரியம் சாதிக்க காலில் விழுவதும் காரியம் முடிந்ததும் காலை வாரி விடுவதும்... நலம் தருமா
காலில் எல்லோரையும் விழ வைத்து கால்களே இல்லாமல் கல்லறை சேர்ந்த கதை மறந்து போனதா......?
சிறுமூளை பெருமூளை
இரு மூளை இருந்தும் என்ன பயன்.... உனது சிரசு பிறர் காலுக்கு சிம்மாசனம் ஆகும்போது
உன்னை பெற்றவன் காலில் விழு மற்றவன் காலில் விழாதே.....
காடு கழனி அலைந்து
களை பறித்து கதிர் அறுத்து
உணவு தரும் உழவனை கூட வணங்கு....
கல்லை வைத்து காணிக்கை பார்க்கும் கயவன் காலில் விழாதே....
காலை கழுவி னால் தான் கடாட்சம் கிடைக்கும் என்பான்....
அவன் கழிவை அள்ளினால் மோட்சம் கிடைக்கும் என்பான்
அவன் மல வாசலை கழுவினால் மங்களம் உண்டாகும் என்பான்....
மடையர்களே அவனை மனிதனாக பாருங்கள் மகான் அல்ல அவன்....
மகானாக அவனை நீங்கள் பார்ப்பதால் உங்களை எல்லாம் மக்குகளாகவே நினைக்கிறான் அவன்....
பிணம் மட்டும் தான் பிறர் தொட்டு கழுவ பிரக்ஞையின்றி இருக்கும்
இவன் என்ன பிணமா....
இவனுக்கு எதற்கு ஆராதனை
இவனுக்கு எதற்கு பூச்சொரிதல்
இவனுக்கு எதற்கு இந்த அற்ப ஆசை....
கல்லைக் கூட வணங்கி விடு
இந்த கயவர்களிடம் இருந்து தள்ளி இரு....
பக்தனாக இருந்தால் என்ன உனக்கு பகுத்தறிவு கிடையாதா....?
உனக்கு பாவமன்னிப்பு கொடுக்க அவன் என்ன பரந்தாமனா
அவன் பாதங்களை கழுவுவதை விட்டுவிட்டு உனக்குள் இருக்கும் மூடநம்பிக்கையை கழுவி விடு
வேண்டும் வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மீண்டும் மீண்டும் கண்டவன் காலில் விழக்கூடும்.....
காரியம் சாதிக்க வீரியமும் வீரமும் விவேகமும் இருந்தால் போதாதா விழத்தான் வேண்டுமா... அவனைத் தொழத்தான் வேண்டுமா....?
உமையாள்
காலில் கூட விழுந்து விடு பரவாயில்லை உறுபசி தீரவேண்டும் ஊடல் இல்லா கூடலும் வேண்டும்
அம்மையப்பன் காலில் விழுந்து விடு... ஆசி கிடைக்கும்... முன்னோர்களை வணங்கி விடு முக்தி கிடைக்கும்....
இல்லாதவன் இருப்பவனை வணங்குகிறான்.. இருப்பவன் இல்லாத இறைவனை வணங்குகிறான்....
எல்லோருமே இயற்கையை வணங்குங்கள் இருப்பவன் இல்லாதவன் என்று இருவருக்கும் சமபங்கு கொடுக்கும் இயற்கையை வணங்குங்கள்
வணங்குவதில்லை என்று
சுணங்குவதில்லை இயற்கை ஒருபோதும்.... வணங்குகிறாய் என்று இணங்குவதும் இல்லை ஒரு போதும்......
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114