நேருக்கு நேர் நின்று என் அழகை ரசிக்கும் துணிவு என் வீட்டு கண்ணாடிக்கு மட்டும்தான்....
எப்படி நான் இருந்தாலும் அப்படியே ஏற்றுக் கொள்கிறது...
அலங்கரித்து கொண்டே இருப்பதை அலுத்துக் கொள்ளாமல் ரசிக்கிறது...
விமர்சனம் செய்வதில்லை ஆனால் விழி மூடாமல் ரசிக்கிறது
வெற்றுடம்பை கூட வெட்கமே இல்லாமல் வெறித்துப் பார்க்கிறது....
முகம் பார்த்து நான் பேசும் போது என் முதுகை பார்ப்பதில்லை
நான் காணும் வரை கண்ணாடி என்னை காண்பதில்லை
பிரதிபலிப்பு என்று எடுத்துக் கொள்வதா... பிரதியுபகாரம் என்று எடுத்துக் கொள்வதா....
நான் செய்யும் எல்லாவற்றையும் செய்கிறது...நிழல் என்று எடுத்துக் கொள்வதா நிசம் என்று எடுத்துக் கொள்வதா...
தனிமையை நான் உணரும் போதெல்லாம் கண்ணாடி முன் நிற்கிறேன் முன்னாடி நானே
முன்நின்று முறைத்துக் கொண்டிருக்கும் என் உருவம் என் மனசாட்சியா.....
கண்ணாடிக்கும் சில நேரம் கண்கள் கூசுகிறது கட்டழகை காணக்காண.....
காதலோடு கண்டு கொண்டே இருப்பதால் ரசாயன மாற்றம்
வசமிழந்து போகிறது..ரசமிழந்து போகிறது.....
ஆடை அணிவதை பார்க்கிறது அலங்கரித்துக் கொள்வதை பார்க்கிறது...என் அழகை அணுவணுவாக ரசிக்கிறது
அழுகையை மட்டும் நேற்றல்ல இன்றல்ல நாளை அல்ல என்றுமே பார்த்ததில்லை என் வீட்டு கண்ணாடி.....
இன்பத்தை அதன் முன்னிலும் துன்பத்தை அதன் பின்னிலும்
அழக்கூடாது என்று அல்ல நான் அழுதால் உடைந்துவிடும் அதன் அழகு குலைந்துவிடும்.....
அனுதினமும் அழகிப் போட்டி நடக்கிறது எனக்கும் என் வீட்டு கண்ணாடிக்கும்.....
வீட்டிற்கு வந்ததும் விடைபெறும் என் நெற்றி பொட்டு அடைபடும் கண்ணாடியில்....இரவு முழுக்க அவள் சுமங்கலி...
வெளியில் செல்லும் போது
ஒட்டியிருந்த பொட்டு என் நெற்றியில்... இப்போது நான் சுமங்கலி.....
என் வீட்டு கண்ணாடியும் நானும் வேறல்ல... எனக்காக அதுவும் அதற்காக நானும்......
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114