உணவு தருகிறேன்
உதவி செய்கிறேன் என்று என் உணர்வு சிதைக்கப்படும் போது
என்னை சிந்திக்க வைக்கிறது நான் ஒரு யாசகன் என்று
ஊனமுற்றவன் என்றுதான் என்னை ஒப்புக் கொள்ள முடிவதில்லை உன் உறுப்புகளோடு நான் ஒப்பிட்டுப் பார்க்காத வரை......
கைகள் இல்லை என்று கவலைப்படுவதில்லை எவனிடமும் கையேந்த தேவையில்லை.......
கால்கள் இல்லை என்ற கவலை படுவதில்லை என் பாதங்கள் பதிந்து புற்களை கூட முளைக்காது செய்யும் பழி பாவத்திற்கு ஆளாவதில்லை..
விழிகள் இல்லை என்பதால் எனக்கு வழி தெரியாமல் இல்லை
குருடனாக இருந்தாலும் நான் இதுவரை குப்புற விழுந்ததில்லை
வாய்பேச முடியவில்லை என்ற வருத்தம் இல்லை எனக்கு.. வாக்கு தவறாமல் இருக்க முடிகிறது
காது கேட்கவில்லை என்ற வருத்தமும் இல்லை ... ஒட்டு கேட்டு ஒற்றுமை குலைக்க வாய்ப்பும் இல்லை...
எது இல்லையோ அதற்கு பதிலாக இன்னொன்று செயல்படுகிறது
இல்லை என்று இயலாமையில் இருப்பதும் செயல்படாமல் இருப்பதில்லை மற்றவர்களைப் போல.......
மூளியான கடவுள் சிலை கூட மூலையிலே.. நான் மட்டும் முயற்சியில் முன்னிலையில்
செயற்கையாய் எல்லா உறுப்புகளும் வந்துவிட்டன
செய்வதறியாது திகைக்க வேண்டியதில்லை நான்...
செயற்கையாய் புன்னகைக்க ஒரு கருவி வேண்டும்... என்னைக் கண்டு ஏளனப் புன்னகை செய்யும் உங்களுக்காக.....
ஏளனம் தான் நீங்கள் எனக்கு கொடுத்த சீதனம்... இழி சொல்லும் பழி சொல்லும் தான் எனக்கான எழுச்சி.....
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்....
என்ன நினைத்தாலும் அவரை ஒன்றும் செய்துவிடாதே இறைவா...
காரணம் சொல்வது இல்லை நான்
காலத்திற்காக காத்திருப்பதும் இல்லை .. காயத்திற்கு வருந்துவதும் இல்லை ...
முடியும் என்ற தன்னம்பிக்கை ஒன்றுதான் நான் மூடனும் அல்ல முடவனும் அல்ல.. வேடன் நான்
வாழ்க்கையை வேட்டையாடும் வேங்கை நான்.....
கைகளும் இல்லை... கால்களும் இல்லை ...விழிகளும் இல்லை செவிகளும் இல்லை... பேச்சும் இல்லை... மீதம் என்ன தான் இருக்கிறது.....
இதயம் இருக்கிறது.... அகம் வெளிக்காட்ட முகம் இருக்கிறது
அதில் வெற்றிப் புன்னகை இருக்கிறது..... புன்னகையில் புதைந்து கிடக்கும் தன் நம்பிக்கை இருக்கிறது....
ஊனம் என்பது என்னை பொறுத்தவரை ஒரு ஞானம்
இல்லை என்றாலும் இல்லை என்று எண்ணாத இறுமாப்பு....
இது வேண்டும் அது வேண்டும் என்று ஏங்காத பெரும் மாண்பு
இதுவும் ஒரு பிறவி இது போதும் என்று என்னும் நான் ஒரு துறவி
உனக்குள் நிரவி என்னை நிறுவி
நீயாக நான் மருவி.. உன்னை நீ உணர்ந்திட நான் ஒரு கருவி....
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114