உன் வயிற்றுப் பசியை நான் அறிவேன் எனக்கும் வயிறு இருப்பதை நீ அறிவாயா மகனே
அதற்க்கும் பசிக்கும் என்று நீ
உணர்வாயா மகனே.....
தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறு தானே..மாயும் வரை
ஓயவில்லை பசியில் நானே
ஆணாய் பிறந்ததால் வீணாயெதற்கென உணர மறுக்கிறாயோ...தாய்மையை
இறுக்கத்தை தொலைக்கும் நெருக்கத்தை கூட தவிர்த்தோம்
இடையில் இருக்கும் உன்னை எண்ணி.....
எங்களின் அடையாளம் என்று உன்னை வளர்த்ததாலோ என்னவோ இன்று முகவரி இல்லாமல் நாங்கள் அகதியாக.....
முகம் கொடுத்து நீ பேசவில்லை
முகாம் தேடி அலைகிறோம் நாங்கள்
முதுமையில் நீ உதவவில்லை
முச்சந்தி வீதியிலே...
கருத்தரித்த காலத்தில் கருப் பை தான் இரைப்பையாக இருந்தது போலும்.... பிரசவத்திற்கு பின்னே பிச்சை எடுத்தேன் உனக்கும் சேர்த்து...
நீ கருத்தரித்த இடம் உருத்தெறியாமல்
சுருங்கியதே... தெரியுமா உனக்கு சோறு இல்லாமலே....
மகப்பேறு வலியைக் காட்டிலும்
அடிவயிற்றில் வரி வரியாக வடுக்கள்
ஆயுள் வரை மகனே.....
உன்னை வருட முடியாத நேரத்தில் வருடி பார்க்கிறேன் என் அடிவயிறு... நீ இருந்த தடம் இன்னமும்...
பிள்ளை வரம் கேட்டு கோவில் கோவிலாக சுற்றியதாலா இன்று எங்களை பிச்சை எடுக்க வைத்து விட்டாய் இங்கு....
மரத்தில் எல்லாம் தொட்டில் கட்டி வேண்டிக் கொண்டேனே.. மரத்தடியில் இறுதியில் தஞ்சம் புகவா
ஆண் பிள்ளை பெற்று விட்டாய் என்று ஊரே அங்கலாய்த்தது... ஏன் பிள்ளை பெற்றோம் என்று நினைக்கிறேன் இன்று....
பெண்ணின் முழுமை தாய்மை என்றேன்... பெண்ணாக பிறந்து பாரடா அதுதான் பெரும் சுமை என்றாள்....
வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி வளர்த்து விட்டோம்...நீயோ வயதை காட்டி வாயைக்கட்ட சொல்லி விட்டாய்
பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்றே பெண் பிள்ளை நான் பெறவில்லை....
ஆணுக்கு பெண் நிகராக முன்னுக்குப் பின் முரணாக
முற்றத்தில் பெற்றோர் சுமையாக
பெண்ணை பெற்றவன் அதிபதி
ஆணை பெற்றவன் அதோ கதி
பத்து பாத்திரம் தேய்த்தாவது அடுக்களையில் ஒண்டி கொள்கிறேன் நான்...
ஊதியம் இல்லாத காவலாளியாக
ஒண்டி கொள்கிறார் அவர்...
அனுமதிக்காக யாரும் காத்திருக்காததே அவமதிப்பு என்று அறிந்தும் கூட...
உப்பு சக்கரை எல்லாத்தையும் குறைக்க சொன்னாங்க...
உப்பு சப்பு அற்று போனது முதுமை
காலம்....
இளமையில் இருந்த பிடிப்பு
இளமையில் இருந்த துடிப்பு
முதுமையில் நிலைக்கும் சகிப்பு
முடங்குகிறேன் நிதம் சலிப்பு....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114