நடந்து வரும் பாதங்களை நான் தொடுவதில்லை....
கிடந்து வரும் பாதங்களை நான் விடுவதில்லை....
சுமையாய் வருவோரை விடுவதில்லை... சுமந்து வருவோரை தொடுவதில்லை....
சொல்லிவிட்டு எவரும் பிரிவதில்லை நான் சொல்லாமல் எவரும் வருவதில்லை....
என்னுள் உறைந்தவர்களை நான் மறப்பதில்லை...என்னை உணராமல் எவனும் இருப்பதில்லை..,
மிதித்தவனையும் மதிக்கிறேன்... மதியாதவனையும் சுமக்கிறேன்...
நிர்மூலமிதுவே
நிதர்சனமிதுவே
நித்திரையிதுவே
நித்தியமிதுவே ....
நாட்கள் தள்ளிப் போவதில்லை நாழிகை தள்ளிப் போவதில்லை
நல்லவன் கெட்டவன் பாகுபாடு இல்லை...
உயர்ந்தவன் தாழ்ந்தவன் வேறுபாடு இல்லை...ஏழை பணக்காரன்
எனக்கு இல்லை..ஏனோ எனக்கு கவலையில்லை
கடமையைச் செய்ய தவறுவதில்லை
உடைமை என்று ஏதும் இல்லை
மடமை எனக்கு என்றுமில்லை....
மண் மீது மட்டுமா வேறுபாடு மயானத்திலே மத கோட்பாடு
இறப்புக்கு பின் ஏனடா நிலைப்பாடு
இன்னும் ஏனடா கூப்பாடு....
உடல் மண்ணுக்கு உயிர் விண்ணுக்கு உணர்வு தமிழுக்கு... விண்ணும் மொழியும் தப்பித்தது...
மயான மண்ணும் இங்கே தவித்தது
உபாதை கொண்டவுடல்... அமிலம் சிந்திய நாவு... காமம் கலந்த கண்கள்
குரோதம் கொண்ட குணம்....
ஆடி அடங்கிய நாளங்கள்.... ஓடி உறைந்த உதிரம்.... ஒவ்வாத வாடை
விரைத்துக் கிடக்கும் திமிர் தனம்
வெடிக்க துடிக்கும் சதை பிண்டம்
விடம் கலநத யாவும் ஓரிடம் தவறாது பதித்த தடம்...சீழ் பிடிக்க கூடும்...
மண்ணுயிர்க்கும் சீக்குறக்கூடும்...
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்....
விதைக்க மறந்தவனை புதைக்க மறுக்கவில்லை நான்... வெறுத்து ஒதுங்கினாலும் விடுவதில்லை நான்....
ஊர் எல்லை உனக்காக....
கல்லறை கடலலை ஏதோ ஒரு நிலை
எஞ்சியதும் மிஞ்சியதும் ஏதுமில்லை
ஏதுமற்றவென்னிலையே ஏகாந்த நிலை.....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114