Type Here to Get Search Results !

ஆளறிச் சான்று

படைப்பாளன் என்பவன் பொதுவானவன் அவனை பட்டா போட நினைக்காதீர்கள்.... 

ஆளறிச் சான்றின் அவசியம் என்ன இவன் நம் ஆள் என்று அறியவா அரசவைக்கவிஞனும் அறம் தவறி அடிவருடியாக...

எவன் ஆளாக எவன் இருந்தால் என்ன.. இவன் ஆளாக தமிழ் ஆணி வேராக...

மொத்த மொழிக்கும் மூலதனமாக என் மொழி வழி முளைத்தவை பிற மொழியாக..

படைப்பாளன் எவனுக்கும் பணிந்து போவதில்லை.. அவர் துணிவினில் தொய்வில்லை ....

எழுதுகோலின் கூர்மையும் எண்ணங்களின் நேர்மையும் இணைந்தால் போதும்.... குத்தி கிழித்து விடும்... எட்டி மிதித்து விடும்

உறுப்பினர் அட்டை கொடுத்து உறைக்குள் அடைக்க பார்க்காதீர்கள் கிழித்து விடும் கூர்முனை

படைத்தவன் எவனென பார்க்காதே படைத்தது யாதென காண்

உரைப்பவன் எவன் என கேட்காதே உரைத்தது  யாதென கேள்...

அடி சீர் கணக்கு பார்க்கிறது பிழை இல்லை..திரை இசைக்கு தேவை பயிற்சி அதற்கான முயற்சி.. 

எதார்த்த கவிஞன் இந்த வலைக்குள் முடங்குவதில்லை.... அவனால் இயலாதது ஏதுமில்லை...

சான்றிதலுக்காக காத்திருக்கும் சராசரி மனிதன் அல்ல படைப்பாளன்

சான்றிதழ் அளித்து சாய்க்க பார்க்காதீர் சாய்ந்து விடுவீர்கள்

கட்சிக்கு ஆள் சேர்ப்பதை போல காண்கிறேன்..உங்கள் கூட்டத்தை வலுப்படுத்த வந்த பலியாடுகளா படைப்பாளன்

அவன் சுதந்திரமானவன் அவன் சுவாசிக்கும் காற்றும் அவனை நேசிக்கும்.. அவன் வெளிவிடும் யாவும் அவனை விசுவாசிக்கும்

அரசு தரும் ஆளறிச் சான்று நான் அடக்கமான பின் பயனற்று போகிறது என் ஆக்கங்கள் அப்படி அல்ல...

உடலைப் பிரிந்த உயிர் உலகளாவி நிரவி இருப்பதைப் போல எனது ஆக்கங்களும் ஆளறிச் சான்றுக்குள் அடங்காமல்...

ஆளறிச் சான்றுக்குள் பதிந்திருக்கும் என் முகம் அல்ல என் அடையாளம்...அகிலம் அறிய செய்த என் அன்னை மொழியே அடையாளம்...எனது ஆக்கங்கள் யாவும் என் முகவரி

இலக்கு இதுவென்று ஏதுமில்லை எல்லை எனக்கு என்றும் இல்லை...

வீசும் காற்று தீண்டும் திசையாவிலும் என் மொழியின் வாசம்.. அதன் வசம் என் கவிதைகள் வீசும்...

கவிதை வடிப்பவனின் எண்ணங்களே அவன் கட்டுக்குள் அடங்குவதில்லை... 

உங்கள் எண்ணங்களுக்குள் அவன் எப்படி கட்டுப்படுவான்.. அவனை அடக்க பார்க்காதீர்கள்... அவனுக்கு நிகர் அவனே..அறியாது முடக்க முயல்பவர் பதரே...

இவண்

ஆற்காடு குமரன்

9789814114

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.