Type Here to Get Search Results !

மாற்றி எழுது

ஏமாளிகள் நாம் என்றாலும் நம்மை ஏமாற்றியவர்களை கோமாளிகளாய் சித்தரித்து நம் ஏமாற்றத்தை மறைத்துக் கொள்கிறோம்..

அப்பட்டமாய் தெரிகிறது அவமானப்படுத்துகிறோம் என்று
அவமானத்தை கூட வெகுமானமாக...
அடையாள படுத்துகிறான் நம்மை கோமாளியாக... 

ஏமாற்றுபவனிடம் எந்த மாற்றமும் இல்லை ஏமாந்து கொண்டிருக்கும் நாம் தான் மாற்றத்தை எதிர்பார்த்து ஒவ்வொரு தேர்தலிலும் ஏமாற்றுபவனை மாற்றிக் கொண்டிருக்கிறோம்...

கொள்கைகளில் முரண்பாடு  கொள்ளை அடிப்பதில் உடன்பாடு உண்மையாக எவனும் இல்லை உண்மை நிலையெது நாம் உணர்வதில்லை....

கட்சிகள் வெவ்வேறாக  களவாணித்தனம் மட்டும் ஒன்றாகவே ... காட்சிகள் நன்றாகவே

எவன் வருவான் எதைத் தருவான் என்ற எதிர்பார்ப்பு எமன் வரும் வரை....

இவன் வந்தால் அவ்வளவு தான் அவன் வந்தால் இவ்வளவுதான் என்று ஒதுக்கி வைக்கிறோம் 

எவன் வந்தாலும் எள்ளளவும் நமக்கு பயனில்லை என்பதனை இன்றளவும் புரிந்து கொள்ளாமலே....

சட்டம் இயற்றுங்கள் அரசியல்வாதிக்கும் அடிப்படைக் கல்வித் தகுதி அவசியம் என்று...‌‌

பதவி வகிப்பவன் பட்டதாரியாக இருக்க வேண்டும்.. அரசின் உதவித்தொகையில் பயின்றவனாக இருக்க வேண்டும்....

சட்டமன்றம் சான்றோர்களின் இருக்கையாக அமைய வேண்டும் இங்கே முதியோர் இல்லங்களாக முட்டாள்களின் கூடமாக....

எழுதிக் கொடுத்து வாசிப்பவன் தலைவனாக இருந்தால் விழுதுகளுக்கு எப்படி வீரியம் பிறக்கும்

சங்கத் தமிழ் அறியாதவனுக்கு சட்டமன்றத்தில் என்ன வேலை பன்மொழி அறிவு அல்லாதவனுக்கு பாராளுமன்றத்தில் என்ன வேலை

கருக்கலைப்பு செய்யப்பட்ட அடிமைகளின் உரிமைகள் கருவுறுகிறது அரசியல்வாதியின்
கருவூலங்களில்.....

திருத்தி எழுதினால் தான் என்ன திருடர்கள் கூட்டம் குறையட்டுமே....
அறிந்தவர்கள் ஆண்டால் என்ன அறிவிலிகளின் கொட்டம் அடங்கட்டுமே.....

திருக்குறளை முன்னிறுத்தி திருத்தப்பட வேண்டும் சட்டங்கள் யாவும்.....

முக்காலத்திற்குமுவந்த முப்பால் உணர்ந்த மூலவன் படைத்த
குறள் வழி நடக்கட்டும் நாளைய தலைமுறை... மொழிவோம் இந்த வழிமுறை.....

இவண்
ஆற்காடு குமரன்
9789814114

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.