Type Here to Get Search Results !

விலைப்பட்டியல்

எல்லா விலை பொருட்களுக்கும் விலைப்பட்டியல் வைத்தால் விளங்கிவிடும் எத்தனை விகிதம் எவனெவனுக்கு செல்கிறது என்று..‌‌..

கலால் வரி 
சேவை வரி
ஊதியக்காரனிடம் கூட
தொழில் வரி....

மூலப் பொருளின் விலை என்னவோ சில்லறை அளவு
மூளை சிதறி போகிறது இவன் சொல்லும் விலையின் அளவு....‌‌ 

ஊர் மேல் போகும் போதெல்லாம் கருத்தரிப்பது போல...கை மாறும்போதெல்லாம் காந்தி  கருத்தரிக்கிறார்......

ஒரு முறை கூட சுகப்பிரசவம் இல்லை அருத்தெடுக்கிறார்கள் வரி என்னும் பெயரில் வறுத்தெடுக்கிறார்கள்

மது கடையிலும் விலைப்பட்டியல் வேண்டும் மருத்துவமனையிலும் விலைப்பட்டியல் வேண்டும்...

மருந்துகளின்  மூலதனம் என்ன... மக்களுக்கு நன்றாய் விளங்கிட வேண்டும்..‌‌.‌ 

நடைபாதை கடையில் பேரம் பேசும் பேமானி களுக்கு... நாட்டின் வருமானம் நன்றாக விளங்கிட வேண்டும்..

ஆலயத்தின் வாசலிலும் அகவிலை பட்டியலின் விளக்கம் வேண்டும்

மூலதனம் நுகர்வோரின்
மூடநம்பிக்கை என்று அவன் மூளைக்கு உரைக்க வேண்டும்....

வாய்க்கு வந்த விலை தான் இன்றைய நிலையில் வாணிபம் வழிகாட்டியது அரசாங்கம்......

உற்பத்தி வரியில் ஆரம்பித்து உடைந்து போன பொருளுக்கும் வரி விதிக்கிறது எடைக்கு போட்டு விற்கும் போது கூட...

கழிப்பறைக்கும் வரி விதிக்கும் அரசு கல்லறைக்கு மட்டும் வரி விலக்கு
இறந்தவன் சாபம் எனக்கு எதுக்கு என்று...

சுரண்டி சுரண்டி தானே சுங்க வரி கட்ட வேண்டி இருக்கிறது..
அடுத்தவனை ஏய்த்து பிழைத்து தானே அரசை எதிர்கொள்ள முடிகிறது....

விதிமுறையை மீறி வரும் நிதி நதி போல் கரை புரண்டு ஓடுகிறது....
கடலில் கலக்கிறது.. உப்பு கரிக்கிறது

விரல் ரேகை பதித்த பாவம் ஆயுள் ரேகை அழிகிறது......

விவரமான விலை பட்டியல் அவசியம்தான் நுகர்வோருக்கான விழிப்புணர்வது....

தண்டச் செலவை தவிர்க்க முடியும்
தலைமையின் வரைவை தணிக்கை செய்ய முடியும்....

விவரம் விளங்கிக் கொண்டால் விரயம் தவிர்க்கக் கூடும்... உணவுப் பொருளுக்கு மட்டும் விலை பட்டியல் வேண்டாம்..

உழவனின் நிலையை காட்சிப்படுத்துங்கள் உணவை
வீணாக்குபவன் விளங்கிக் கொள்ளட்டும்..

வீணாக்காமல் இருந்தாலே போதும் பற்றாக்குறை இல்லாமல் போகும் குற்றம் குறை நேராமல் ஆகும்..

இவண்
ஆற்காடு குமரன்
9789814114

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.