மத்த சொந்தங்களை விட ரத்த சொந்தங்களால் மட்டுமே மொத்த அழுத்தமும் ரத்த அழுத்தமாக.....
வேலை நாட்களில் கிடைக்கும் நிம்மதி விடுமுறை நாட்களில் அதோகதி...
மொத்த சொந்தங்களும் கூட வேண்டாம் ரத்த சொந்தங்கள் கூடினால் போதும் பித்தம் தலைக்கேறி விடக்கூடும்...
சத்தம் இங்கே கூடிவிடும் ரத்த நாளங்கள் சூடு ஏறிட கூடும்...
மகளிர் யாவரும் ஊமையாய் பிறந்தால் மண்ணில் இங்கே மௌனம் பிறக்கும்
ஆடவர் கூட ஆணவம் இன்றி அடங்கி கிடந்தால் அகிலம் முழுதும் அன்பு நிலைக்கும்..
புரிந்து கொள்ளாத இணையர்களுக்குள் எரிந்து விழுவதை தவிர வேறு என்ன உண்டு...
வாராவாரம் ஆரவாரம் வயிறு பசியில் சேதாரம்... வாழ்வாதாரம் தேடி அலைய வேலை தானே மூலாதாரம்...
தீர்த்துவிட முடியவில்லை... தீர்ந்துவிடும் எண்ணமும் இல்லை
சேர்ந்து இசைக்க வழியும் இல்லை
சார்ந்திருக்க மனமும் இல்லை...
விடுமுறை நாளிலும் வேலை தேடி வீதியில் தானே அலைகின்றார்..
விட்டால் போதும் விடுதலை என்றே
விலகித்தானே போகின்றார்....
தேவைகள் தன்னை நிறைவேற்ற தேடலைத்தானே தொடர்கின்றார்
ஊடலும் கூடலும் வேண்டாம் என்றே
ஒதுங்கி தானே போகின்றார்....
உறுபசி வந்து உணர்வுகள் தின்று
நடுநிசி உறக்கம் கொன்றதடி..
நடுநிலை அல்ல.. நடுத்தர வர்க்கம்
நடுத்தெருவே இவனுக்கு நாளும் சொர்க்கம்.....
இவண்
ஆற்காடு குமரன்
9789814114