கருவறை இருட்டு பயம் கால்நீட்டிப் படுக்க கருவறை சுவர்கள் இடியுமோ என்ற பயம்.....
மிதந்த பனிக்குடம் உடைந்ததும் உயிர் பயம்... உதிர்ந்த நீர் உள்ளுக்குள் உள்ளுக்குள் போகுமோ என்ற பயம்
தலைகீழாக கவிழ்ந்ததும் பயம்... வெளிச்சக் கீற்று விழியில் காண வெளியில் வந்தேன் இருந்தாலும் பயம் பயம்.....
உதிரமும் சதையும் உறைந்திருக்க பயம்.....தொடர்ந்து வந்த தொப்புள்கொடி துண்டிக்க பயம்
அசைத்துப் பார்த்து என்னை அழ வைத்த அத்தனை பேரையும் அருகில் கண்டதும் பயம்....
கைக்கெட்டும் தூரத்தில் கருப்பைச் சுவர் இருந்தது..... கரு இருட்டாக இருந்தாலும் கவலை இல்லை எனக்கு...
பத்துமாத வாழ்க்கை அல்லவா பழகிப் போனது... பசி அறியாமல் வாழ்க்கை சென்றது
பரந்து விரிந்து கிடக்கும் வானும் மண்ணும் என்னை பயமுறுத்துகிறது....
ஆசையாய் பார்க்க வரும் அத்தனை பேரையும் அதிசயமாய் பார்க்கிறேன் நான் ஆயினும் பயம்
முரட்டு மீசை அப்பாவைப் பார்க்க முளைத்தது பயம்.. பயந்து பயந்து பயணம் தொடர்ந்தது....
பருவம் வந்ததும் நானறிந்தது பயம் என்பது என் இனத்திற்கு சொந்தம் என்பது......
கருவறையும் இருட்டு கல்லறையும் இருட்டு கடக்கும் தூரமும் பதுங்கு குழியில் இருட்டு
பொங்கித் தின்ன வழியுமில்லை காட்டிக் கொடுத்துவிடும் கரும் புகை......
வெடிச்சத்தம் பயம்... விழும் அனைத்தும் பயம்... நொடிக்கொருமுறை சாயும் சவம் சத்தியமாய் பயம் பயம்....
எத்திசையில் எது வருமோ
எத்திசையும் எதிராகுமோ
குற்றம் யாதென உணரும் முன் குற்றுயிரும் குலையுயிருமாய்
எல்லாம் சுடலை சேர விடலை எனக்கு பயம் பயம்.....
வெளியில் விளையாட முடியவில்லை... விளையாடாத தால் என் விதி இன்னும் முடியவில்லை.....
இரவில் கூட உறக்கமில்லை மின்னும் விண்மீன் கண்ணிவெடியா.. காணும் நிலவு விளக்கு ஒளியா....
காண காண என் கண்களில் கண்டேன் பயம் பயம்
உடமைகள் போனது உரிமைகள் போனது உறவுகள் போனது...
உறுதுணை உயிரைத் தவிர வேறொன்றுமில்லை....
ரத்தமும் சதையும் யுத்தத்தில் மட்டுமல்ல மொத்தத்திலும்
எரியுருளை (சிலிண்டர்)வெடிக்கிறது
என் இனத்தின் ஓலம் ஒலிக்கிறது
ஒப்பந்த அடிப்படையில்
ஓரவஞ்சனை நிகழ்கிறது...
ஒவ்வாமை கிருமிகள் இங்கே
என் மண்ணில் விதைகிறது....
மண்ணுக்காக போராடி
மண்ணுக்குள் விதைந்த
மரபில் பிறந்தவன் நான்..
என்ன தான் தேவை என்று இன்று வரை புரியவில்லை... எனது தேவை மண்ணென்று ஏனோ இந்த மர மண்டைகளுக்கு புரிவதில்லை.....
பிறந்த மண்ணிலே வாழ்வதற்காக போராடி இம் மண்ணிலேயே விதைவதற்கும் திறன் வேண்டும்.....
பயம் கொள்கிறேன்... என் தலைமுறைக்காக... எனது மண்ணைக் காக்க...
பயம் கொள்வதும் ஒரு வகையில் நயம் கொள்வதே... இடம் பொருள் ஏவலுக்காக காத்திருப்பதே....
இனத்தை அழித்த உன் மீது சினம் இருக்குது இருந்தாலும் மனிதன் என்ற மனம் இருக்குது.....
உயிர் பயம் என்பது பொதுவானது
உண்மையில் அது உயர்வானது
உணர்வதே உனக்கு நல்வழி ஆகுது
இனியாவது திருந்தி வாழு இல்லையெனில் வருந்தி வாழக்கூடும் நீ வரும் நாட்களில்....
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114